"வீர தீர சூரன் 2" படத்தின் முதல் நாள் வசூல்

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் நேற்று மட்டும் ரூ3.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன் 2' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படங்களை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.
படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் நேற்று மாலை காட்சியில் இருந்து தொடங்கினாலும் படம் நேற்று மட்டும் ரூ 3.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.தற்பொழுது திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதால் படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை இருக்கும் காரணத்தால் இப்படத்தின் வசூல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.