வேதிகா நடிக்கும் 'பியர்' படத்தின் டிரெய்லர் வெளியீடு


நடிகை வேதிகா நடிக்கும் 'பியர்' படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிட்டார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடித்த முனி, சிம்பு நடித்த காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இருப்பினும் 2013-ம் ஆண்டு பாலா இயக்கிய 'பரதேசி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பினார் வேதிகா. இதைத் தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சமீபத்தில் இவர் பிரபு தேவாவுடன் பேட்ட ராப் படத்தில் நடித்திருந்தார்.


இதனையடுத்து, வேதிகா நடிப்பில் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ள படம் 'பியர்'. இப்படத்தில் இவருடன், அரவிந்த் கிருஷ்ணா, பவித்ரா லோகேஷ், அனிஷ் குருவில்லா, சாயாஜி ஷிண்டே, சத்ய கிருஷ்ணா, சாஹிதி தாசரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் சாங்கை நேற்று முன்தினம் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்.

இந்நிலையில் வேதிகா நடிக்கும் 'பியர்' படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இப்படத்தை தொடர்ந்து, வேதிகா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. இப்படம் வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது.


Next Story