மண்சோறு தின்ற ரசிகர்களை சாடிய சூரி - வைரமுத்து பாராட்டு


Vairamuthu praises Suri who Slams Supporters Over Maaman Celebration
x

’மாமன்’ படம் வெற்றியடைய சூரியின் ரசிகர்கள், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்தனர்.

சென்னை,

மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களை கடுமையாக சாடிய சூரிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்'. ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையில், 'மாமன்' படம் வெற்றியடைய சூரியின் ரசிகர்கள், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்தனர். இதனை நடிகர் சூரி கடுமையாக சாடி இருந்தார். இது ரொம்ப முட்டாள்தனமானது எனவும், இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் எனவும் கூறி இருந்தார்.

இந்நிலையில், மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களை கடுமையாக சாடிய சூரிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது.

இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்கமுடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்.

மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை 'பலே பாண்டியா' என்று பாராட்டுகிறேன்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story