கர்நாடகாவில் 'தக் லைப்' படம் ஒத்திவைப்பு

கர்நாடகாவில் 'தக் லைப்' படம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கர்நாடகாவில் 'தக் லைப்' படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்தை வெளியிட தடை விதித்தது.
இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த இந்த மனுவில், கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய கோரியும் கமல்ஹாசன் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்புக்கு நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியது. இதனையடுத்து, கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு கமல்ஹாசன் விளக்க கடிதம் எழுதியிருந்தநிலையில், அந்த விளக்க கடிதம் குறித்து கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
'கடிதத்தில் ஏன் மன்னிப்பு எனும் வார்த்தை இல்லை..? மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறார் கமல்? கன்னடத்தை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம்; மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? பிரச்சினையின் தீவிரத்தை கமல் உணர வேண்டும்; திரைப்படத்தை விட இந்தியாவின் ஒற்றுமை பெரிது எனவும் கர்நாடக பிலிம் சேம்பர், கர்நாடக அரசு மற்றும் கமல்ஹாசன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி கூறி இருக்கிறார்.
தொடர்ந்து, கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கமல்ஹாசன் தரப்பு வாதிட்டதையடுத்து, பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.






