'விஷ்வக் சென்னின் 'பாலக்னுமா தாஸ்' படத்தில் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம்'- ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் ரவி தேஜா முல்லபுடி இயக்கத்தில் 'மெக்கானிக் ராக்கி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், இவருடன் விஷ்வக் சென், மீனாட்சி சவுத்ரி மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் நடிகர் விஷ்வக் சென், கடந்த 2019-ம் ஆண்டு, தான் இயக்கி நடித்திருந்த 'பலக்னுமா தாஸ்' படத்தில் நடிக்க நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தான் தனது முதல் தேர்வாக இருந்தார். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாக கூறியிருந்தார். இந்நிலையில், 'பலக்னுமா தாஸ்' படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'பலக்னுமா தாஸ்' படத்தில் எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு போதுமான காரணத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. அதுதான் நான் அந்த கதாபாத்திரத்தை நிராகரிக்க காரணமாக இருந்தது' என்றார்.