எந்தவித அறிவிப்புமின்றி எனது கட்டடத்தை இடித்துள்ளார்கள் - நடிகர் நாகார்ஜுனா


எந்தவித அறிவிப்புமின்றி எனது கட்டடத்தை இடித்துள்ளார்கள் - நடிகர் நாகார்ஜுனா
x
தினத்தந்தி 24 Aug 2024 3:44 PM IST (Updated: 24 Aug 2024 9:53 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகர் நாகார்ஜுனா தனது கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா அருகே ஏரி நிலத்தை ஆக்கிரமித்து பிரபல நடிகர் நாகார்ஜுனா பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்த அரங்கில் தான், 2015-ல் தற்போதைய தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகள் நடந்தன.

பல படங்களின் ஷூட்டிங்கும் நடந்துள்ளது. மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014-ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று காலை இடித்து அகற்றியது. பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35 சதவீத கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாகவும் பொதுச் சொத்தில் சுமார் 1.2 ஏக்கர் ஆக்கரமித்து நாகர்ஜுனா அரங்கை அமைத்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் நாகார்ஜுனா கூறியதாவது: 'எனது கருத்தரங்கு கட்டடத்தை சட்டத்துக்கு புறம்பான நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் இடித்துள்ளார்கள். நாங்கள் சட்டத்தை எந்த வகையிலும் மீறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு இன்ச் கூட ஆக்கரமித்து கட்டப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் எந்தவித அறிவிப்புமின்றி அரங்கை இடிக்கக் கூடாதென நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டுள்ளது.

தவறான தகவலால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை. சட்டத்தை மதிக்கும் நபராக இருக்கும் நான் நீதிமன்றத்தில் என் மீது தவறென தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே அதை இடித்துவிடுவேன்.அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு சரியான நிவாரணம் வேண்டி நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்' என்றார்.

நாகார்ஜுனா தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story