'பேபி & பேபி' படத்தின் 'தென்பாண்டி முத்துப்போல' பாடல் வெளியானது


தினத்தந்தி 18 Jan 2025 3:32 PM (Updated: 18 Jan 2025 3:39 PM)
t-max-icont-min-icon

நடிகர் ஜெய், சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள 'பேபி & பேபி' திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய். இவர் தற்போது 'பேபி & பேபி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கியுள்ளார். அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில், குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான பேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார், அறிமுக இயக்குநர் பிரதாப். இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்திலும், யோகி பாபு மிக முக்கிய பாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

நாளைய தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாகவும் நடித்து, மீண்டும் திரையில் களமிறங்கி உள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர், கே.பி.ஒய்.தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் 'பேபி & பேபி' படத்தின் 'தென்பாண்டி முத்துப்போல' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகள் எழுத இமான் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.


Next Story