கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சந்தித்த அல்லு அர்ஜுன்


Theatre stampede: Allu Arjun visits injured boy in hospital
x

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பல்வேறு நிபந்தனைகளுடன் அல்லு அர்ஜுன் சந்தித்தார்

ஐதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த மாதம் 5-ம் தேதி வெளியானது. 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.

4 வாரம் இடைக்கால ஜாமீன் விரைவில் முடிய இருந்த நிலையில் நம்பள்ளி நீதிமன்றம் கடந்த 3ம் தேதி அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு இரண்டு மாதங்களுக்கு அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரையில் ஆஜராக வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது.

இந்த சூழலில், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உயிரிழந்த ரேவதியின் மகன் தேஜை காண கடந்த 5-ம் தேதி அல்லு அர்ஜுன் திட்டமிட்டார். இதனையடுத்து, தேஜை காண ராம்கோபால்பேட்டை போலீசார் அல்லு அர்ஜுனுக்கு பல நிபந்தனைகளை விதித்தனர்.

அதன்படி, 'பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புடன் சிறுவனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஒத்துழைக்க மறுத்தால், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்' என அதில் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, அந்த திட்டம் அன்று ரத்து செய்யப்பட்டநிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் தற்போது புஷ்பா-2 கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன் தேஜை அல்லு அர்ஜுன் சந்தித்துள்ளார். அல்லு அர்ஜுன் வருகையையொட்டி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Next Story