'திராவிடம்' சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து


திராவிடம் சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து
x

இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அந்த விழாவில் கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது. இதனையடுத்து'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்தது.

இந்த செயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமித்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழையும்

தமிழ் நாட்டையும்

திராவிடக் கருத்தியலையும்

எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்

பல நிகழ்வுகளைக் கண்டும்

காணாமல் போயிருக்கிறோம்

ஆனால்,

தமிழ்த்தாய் வாழ்த்தில்

"தெக்கணமும் அதிற்சிறந்த

திராவிடநல் திருநாடும்"

என்ற உயிர் வாக்கியத்தைத்

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து

தவிர்த்ததைக்

காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்

கடந்துபோக மாட்டார்கள்

இருதயக் கூடு எரிகிறது

எவ்வளவுதான்

பொறுமை காப்பது?

இந்தச் செயலுக்குக்

காரணமானவர்கள்

யாராக இருந்தாலும்

தமிழர்கள் அவர்களை

மன்னிக்கவே மாட்டார்கள்

"திராவிட" என்ற

சொல்லை நீக்கிவிட்டு

தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?

தமிழ்த்தாய் வாழ்த்தில்

தவிர்ப்பதற்கு மட்டும்

யார் தைரியம் கொடுத்தது?

திராவிடம் என்பது நாடல்ல;

இந்தியாவின்

ஆதி நாகரிகத்தின் குறியீடு

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்

இதுபோன்ற இழிவுகள்

தொடர்ந்தால்

மானமுள்ள தமிழர்கள்

தெருவில் இறங்குவார்கள்;

தீமைக்குத் தீயிடுவார்கள்

மறக்க வேண்டாம்

தாய்மொழி காக்கத் தங்கள்

உடலுக்கும் உயிருக்குமே

தீவைத்துக் கொண்டவர்கள்

தமிழர்கள்

அந்த நெருப்பின் மிச்சம்

இன்னும் இருக்கிறது எங்களிடம்

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.



Next Story