'சொர்க்கவாசல்' பட விழா: நான் சங்கி இல்லை, என்னை பழி வாங்காதீங்க - ஆர்.ஜே. பாலாஜி
படத்தை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள், ஆனால் பழிவாங்கும் நோக்கத்தில் டார்கெட் பண்ணி அடிக்காதீங்க என்று 'சொர்க்கவாசல்' பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை,
"நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ்" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்குகிறார்.
இவர் தற்போது பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் 'சொர்க்கவாசல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குனர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் வெளியிட்டனர்.
இப்படம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி டீசர், டிரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இன்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, "டிரெய்லர் நாளைக்கு வரப்போகுது என்று போஸ்டர் போட்டால் என்னுடைய விநியோகஸ்தர் எஸ் ஆர் பிரபு மீதான கோபத்தால் என்னை திட்டுகிறார்கள். நான் பாவாடை கிடையாது. சங்கியும் கிடையாது. படத்தை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. படம் நன்றாக இல்லை என்றால் சொல்லுங்கள். ஆனால் பழிவாங்கும் நோக்கத்தில் டார்கெட் பண்ணி அடிக்காதீங்க. நல்ல படம் எடுத்திருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆதரவும் இந்த படத்திற்கும் வேண்டும். அப்போதுதான் இந்த படம் வாழை, லப்பர்பந்து போன்ற படங்களைப் போல் அனைவரிடமும் போய் சேரும்" என்று தெரிவித்துள்ளார்.