'சொர்க்கவாசல்' : இதுவரை நான் பண்ணாத படம் - ஆர்.ஜே.பாலாஜி


சொர்க்கவாசல் : இதுவரை நான் பண்ணாத படம் - ஆர்.ஜே.பாலாஜி
x
தினத்தந்தி 23 Nov 2024 7:15 AM IST (Updated: 30 Nov 2024 7:07 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குனனராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்குகிறார்.

இவர் தற்போது பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் 'சொர்க்கவாசல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குனர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இப்படம் குறித்து பேசியுள்ளார். அதில், 'நான் இதுவரை நடித்த படங்களை விட இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளேன், இப்படத்தில் அடுத்தது என்ன பண்ண போகிறோம் என்ற தெளிவு இருந்தது என்றார். மேலும் இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த திட்டத்தை தொடங்கும் போதே நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Next Story