ரீ-ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் "ரஜினிமுருகன்"

பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் வரும் 14ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தபடாத வாலிபர் சங்கம்' திரைப்படம் அவருடைய கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, அப்படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2016- ம் ஆண்டு உருவாகிய 'ரஜினிமுருகன்' திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான 'சீமராஜா' திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான 'ரஜினிமுருகன்' திரைப்படம் மீண்டும் திரைகளில் வெளியிடப்படவுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின.
இந்த நிலையில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வருகிற 14ம் தேதி ரஜினிமுருகன் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அமரன் படத்தின் பெரிய வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி, மதராஸி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது. இப்படி ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் விஜய் நடித்த 'கில்லி' கடந்தாண்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. பழைய படங்களைத் திரையில் மீண்டும் ரசிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் தயாரிப்பாளர்களும் முன்பு வெளியான படங்களை ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.