மீண்டும் இணையும் அஜித் -சிறுத்தை சிவா கூட்டணி

கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2025-ம் ஆண்டு மே 1-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சூர்யாவை வைத்து இயக்குநர் சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் நேற்று வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதன் 2ம் பாகம் 2026ல் எடுக்கப்படுமென தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "அடுத்ததாக கங்குவா 2 படம் அமையாது. அஜித்தின் அடுத்த படத்தினை சிவா இயக்கவுள்ளார். அந்தப் படம் முடிந்ததும் கங்குவா 2 படத்தை சிவா நிச்சயமாக இயக்குவார்" என்றார். சன் பிக்சர்ஸ் அஜித்தின் 64ஆவது படத்தை தயாரிக்க உள்ளதாகவும் 2025 இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு முடிவடையுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் -சிவா கூட்டணியில் இது 5வது படமென்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார்.