நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு இயக்குநர்கள் விளக்கம்


நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு இயக்குநர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 6 Sept 2024 9:47 PM IST (Updated: 6 Sept 2024 9:55 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

எர்ணாகுளம்,

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகியநிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன்பாகவும், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார். மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம் சாட்டபட்ட நாளில் நிவின் பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14ம் தேதி முதல் 15ம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் நிவின் பாலி ஒரு கும்பலுடன் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


Next Story