'பேபி ஜான்' படத்திற்கு கீர்த்தி சுரேஷை பரிந்துரைத்த சமந்தா?
'பேபி ஜான்' படத்திற்கு தன்னை பரிந்துரைத்தது சமந்தா என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
தமிழில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தெறி'. இந்த படத்தில் விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை தழுவி தற்போது இந்தியில் 'பேபி ஜான்' என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான், நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியான இத்திரைப்படம் இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், 'பேபி ஜான்' படத்திற்கு தன்னை பரிந்துரைத்தது சமந்தா என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பேபி ஜான்' படத்திற்கு என்னை பரிந்துரைத்தது சமந்தாதான். அதை வருண்தான் என்னிடம் கூறினார். தமிழில் சமந்தா நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் தெறி. அந்த படத்தில் அவர் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் உண்மையில் பயமாக இருந்தது' என்றார்.