சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா நியமனம்


சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா நியமனம்
x

சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் வாரிசு, தெலுங்கில் கீத கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலானது. நடிகைகளின் 'டீப் பேக்' ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த தொழில்நுட்பத்தில் நடிகைகளின் முகத்தை ஆபாச நடிகைகள் உடலில் பொருத்தி நிஜமானது போலவே மார்பிங் செய்து உருவாக்குகின்றனர். இதையடுத்து டெல்லி போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

தற்போது இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ராஷ்மிகாவின் செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சைபர் கிரைமுக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று உள்துறை அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ராஷ்மிகா மந்தனா கூறியது: "சைபர் கிரைம் என்பது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், வர்த்தர்கள், சமூகங்களை பாதிக்கும் ஆபத்தான மற்றும் பரவலான அச்சுறுத்தலாகும். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், இது தொடர்பான விழிப்புணர்வையும், இணைய குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து மாற்றத்தை உருவாக்க அர்பணிப்புடன் செயல்படுவேன்.

இந்த இணைய குற்றங்களை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் முக்கியம். என்னுடைய டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலானது ஒரு சைபர் குற்றம் என்பதை அறிந்தேன். அதன்பிறகு, அதற்கு எதிராக போராடவும், இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் முடிவு செய்தேன். இந்திய அரசாங்கத்திடமிருந்து எனக்கு கிடைத்த ஆதரவுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாம் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்" என்றார்.

ராஷ்மிகா நடிப்பில் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story