'அந்நியன்' ரீமேக்கில் ரன்வீர் சிங் - கருத்து தெரிவித்த விக்ரம்


Ranveer Singh on Anniyan remake - Vikram comments
x
தினத்தந்தி 10 Sept 2024 9:19 AM IST (Updated: 10 Sept 2024 9:20 AM IST)
t-max-icont-min-icon

அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மும்பை,

விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ், விவேக் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் அந்நியன். இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஷங்கர் இயக்க ஜெயந்திலால் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கபப்பட்டது. ஆனால், இப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் குறித்து விக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ' ஷங்கர் சார் என்னை வைத்து அந்நியன் 2-ம் பாகத்தை எடுத்திருக்க வேண்டும். அந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் ஒரு நல்ல நடிப்பை கொடுத்திருப்பார். ரன்வீர் சிங்கை ஒரு நட்சத்திரமாக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்,'என்றார்

அந்நியன் தெலுங்கில் அபரிசிடு என்ற பெயரிலும், இந்தியில் அபரிசித் என்ற பெயரிலும் டப் செய்யப்பட்ட வெளியானது. இதனைத்தொடர்ந்து, அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கிற்கான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், தனது அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்வதாக குற்றம் சாட்டி, ஷங்கர் மீது புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்தி ரீமேக் கிடப்பில் போடப்பட்டதை இயக்குனர் ஷங்கர் கடந்த ஜூலை மாதம் உறுதி செய்தார். விக்ரம் கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்தார். இப்படம் கடந்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மறுபுறம், ரன்வீர் சிங் அடுத்ததாக ரோஹித் ஷெட்டின் 'சிங்கம் அகெய்ன்' படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.


Next Story