30 ஆண்டுகளை நிறைவு செய்த 'பாட்ஷா' திரைப்படம்
ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
சென்னை,
1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் பாட்ஷா. இந்த படம் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு 2017-ம் ஆண்டு மீண்டும் திரையிடப்பட்டிருந்தது.
சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் திரைக்கதையாக அமைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஹம் எனும் இந்திப் படத்தை லேசாய் தழுவியே பாட்ஷா எழுதப்பட்டிருக்கும். ஹம் திரைப்படத்தில் ரஜினியும் நடித்துள்ளார். ரஜினி 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு' என்று சொல்லும் காட்சியின் பின்னணி இசையிலும், பாடல்களிலும் தேவா பட்டையை கிளப்பியிருப்பார்.
வரலாற்று சிறப்புமிக்க 30வது ஆண்டு விழாவை முன்னிட்டு "பாட்ஷாவின் 30 ஆண்டு கொண்டாட்டம்" சிறப்பு பதிப்பு போஸ்டரை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.