அல்லு அர்ஜுனுடன் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா.. ஏன் தெரியுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படம் பிரமாண்டமாக உருவாக உள்ளது.
சென்னை,
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். இது அட்லீயின் 6-வது படமாகும். அதேபோல், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இப்படத்தை இயக்க உள்ளதால் இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
இவர்களது கூட்டணியில் பிரமாண்டமாக உருவாக உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பிரியங்கா சோப்ரா அவருடன் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களை பிரியங்கா சோப்ரா தரப்பினர் மறுத்துள்ளனர்.
அதாவது, ''ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல 'கிரிஷ்-4' படத்துக்கும் அவர் கால்ஷீட் அளித்துள்ளார். எனவே கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே அல்லு அர்ஜுன் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க முடியாமல் போய்விட்டது. சமூக வலைதளங்களில் பரவும் யூகங்களை நம்பவேண்டாம்'', என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.