'கேம் சேஞ்சர்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி


கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி
x

ராம் சரண் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக நாளை திரைக்கு வரவுள்ளது.

இப்படம் தமிழ் நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்படி, ஷங்கர் இயக்கும் மற்றொரு திரைப்படமான இந்தியன் 3-யை முடித்துக்கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை வெளியிடக்கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்திருந்தது.இந்தியன் 3' படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ. 65 கோடி பட்ஜெட் கேட்பதாகவும், 'இந்தியன் 2ல் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது' எனவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. திரைத்துறை கூட்டமைப்பிடம் அளித்த புகாரையும் லைகா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் ராம் சரண் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் 13ம் தேதி வரை சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டநிலையில், நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்கி 5 காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.


Next Story