'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த "கருப்பி" நாய் உயிரிழப்பு
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த "கருப்பி" நாய் சாலையில் வந்த வண்டி மீது மோதி உயிரிழந்துள்ளது.
தூத்துக்குடி,
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படங்களில் மனிதர்களுக்கு நெருக்கமான பல விலங்குகளை காட்சிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தனது முதல் படமான பரியேறும் பெருமாளில் நாயையும் கர்ணன் படத்தில் கழுதை, குதிரையையும் மாமன்னன் படத்தில் பன்றி, நாயையும் வாழை படத்தில் மாடையும் பயன்படுத்தியிருந்தார்.
பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற பெயருடைய சிப்பிப் பாறை வகை இனத்தை சேர்ந்த நாயை நடிக்க வைத்து அதன் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். கருப்பி நாய் இறந்த பிறகு அதற்கென தனி ஒப்பாரி பாடலையும் வைத்து மக்கள் வாழ்வியலை காட்சிப்படுத்தியிருந்தார். 'அடி கருப்பி.. அடி கருப்பி..' என்று கருப்பி நாய்க்கு தனி ஒப்பாரி பாடல் இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த சத்தத்தை கேட்டு சாலையில் ஓடியுள்ளது. அப்போது சாலையில் வந்த வண்டியில் மோதி உயிரிழந்துள்ளது. இதையடுத்து நாயின் உரிமையாளரும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவருமான விஜயமுத்து என்பவர் நாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் பண்ணியுள்ளார். இந்த சோகமான சம்பவத்தால் பரியேறும் பெருமாள் பட ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.