காதல் அல்ல; முன்னாள் காதலரை பழி வாங்க... வேறொரு நடிகரை மணந்த பிரபல நடிகை
நடிகை மதுபாலா சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டபோது, அவரிடம் தன்னுடைய காதலை பிரபல நடிகர் கிஷோர் குமார் வெளிப்படுத்தினார்.
புனே,
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அவர். திரையுலகினரால் கொண்டாடப்பட்ட மற்றும் பேரழகு வாய்ந்தவராக அறியப்பட்டவர். அவருடைய புன்னகையை பார்ப்பதற்காகவே எண்ணற்ற ரசிகர்கள் காத்திருந்தனர். உடன் நடித்தவர்களே கூட மயங்கும் அளவுக்கு அழகானவர். மும்தாஜ் ஜெகன் பேகம் என அழைக்கப்பட்ட நடிகை மதுபாலா, அந்த காலகட்டத்தில் பல பெரிய சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் ஒன்றாக கிசுகிசுக்கப்பட்டவர்.
அவர்களில் நடிகர் திலீப் குமாரும் ஒருவர். தரானா படப்பிடிப்பில் அவர் மீது திலீப்புக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதலில் விழுந்தனர். திருமணம் செய்வது என முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் சேர்ந்து நடித்த முகல்-இ-ஆசம் படத்தின் முடிவை போன்றே, இவர்களுடைய உண்மையான காதல் வாழ்வும் சோகத்திலேயே முடிந்தது.
அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான இறுதி தருணம் வரை வந்து விட்டனர். ஆனால், கோர்ட்டு விவகாரம் ஒன்றால் அவர்கள் பிரிய நேரிட்டது. நயா தவுர் என்ற பட தயாரிப்பின்போது, படப்பிடிப்புக்காக நகரை விட்டு வெளியே போக கூடாது என மதுபாலாவின் தந்தை அதவுல்லா கான் உறுதியாக கூறி விட்டார்.
இதனால், ரூ.30 ஆயிரம் வரை பணம் இழப்பு ஏற்பட்டது என கூறி பட தயாரிப்பாளர் பி.ஆர். சோப்ரா வழக்கு தொடுத்துள்ளார். இதில், நடிகை மதுபாலா மற்றும் அதவுல்லாவுக்கு எதிராக திலீப் சாட்சியம் அளித்திருக்கிறார். தன்னுடைய தந்தையை மன்னித்து விடும்படி திலீப்பிடம், மதுபாலா கெஞ்சியுள்ளார்.
ஆனால், அவர் மறுத்து விட்டார். நம்முடைய வாழ்வு பாதிக்கும் என மதுபாலா கூற, அதற்கு திலீப், ஏன் என்னை இந்தளவுக்கு கட்டாயப்படுத்துகிறாய்? என பதிலுக்கு கேட்டிருக்கிறார்.
இதன்பின்னர், தந்தையுடனான இடையூறான உறவில் இருந்து மதுபாலாவை திலீப் காப்பாற்றி விட்டார் என்றோ, திலீப்புடன் இருப்பதற்காக தந்தையை மதுபாலா கைவிட்டு விட்டார் என்றோ, பத்திரிகைகள் யூகங்களை வெளியிடுவதற்கு மதுபாலா விரும்பவில்லை. அதற்கு இடமும் தரவில்லை. திலீப்புடனான உறவை துண்டித்து விட்டார்.
இந்நிலையில், 1960-ம் ஆண்டு சிகிச்சைக்காக மதுபாலா லண்டன் புறப்பட்டார். அப்போது, பிரபல நடிகர் கிஷோர் குமார் அவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதுபற்றி மதுபாலாவின் சகோதரி பேட்டி ஒன்றில் கூறும்போது, திலீப் மீது மதுபாலாவுக்கு ஆழ்ந்த காதல் இருந்தது. ஆனால், கோபத்தில் கிஷோர் குமாரை திருமணம் செய்யும் முடிவை மதுபாலா எடுத்தார் என கூறினார்.
இருவரும் திருமணம் செய்யும்போது, மதுபாலாவுக்கு வயது 27. எனினும், 9 ஆண்டுகளுக்கு பின்பு, வென்டிரிகுலார் செப்டல் எனப்படும் இருதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, அதனால் நடிகை மதுபாலா உயிரிழந்து விட்டார். மறுபுறம், திலீப் குமார் நடிகை சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அன்பான தம்பதி என பாலிவுட்டில் பெயரெடுத்தனர். வயது முதிர்வால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, திலீப் குமார் அவருடைய 98-வது வயதில் காலமானார்.