பராசக்தி தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது: நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு


பராசக்தி தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது: நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2025 12:23 AM (Updated: 31 Jan 2025 1:01 AM)
t-max-icont-min-icon

பராசக்தி திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று நேஷனல் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் இப்படத்திற்கு 'பராசக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதேபோல, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ''சக்தித் திருமகன்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் இப்படத்திற்கு 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இப்படங்கள் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பு வைக்கப்பட்டுள்ள சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையில், விஜய் ஆண்டனி ஏற்கனவே 'பராஷக்தி' என்ற தலைப்பை பதிவு செய்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனைதொடர்ந்து ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தன்னிடமுள்ள 'பாரசக்தி' தலைப்பை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்ததாக வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனால் இந்த தலைப்பு யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் மற்றொரு பராஷக்தி படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி இருவரும் நேரில் சந்தித்துகொண்டுள்ளனர். பின்னர் இந்த படங்களின் தலைப்பினால் எழுந்த பிரச்சினையை கலந்து பேசி பரஸ்பரம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் இரண்டு தரப்பு பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மூன்றாவது தரப்பாக 'இருங்க பாய்' என சிவாஜி நடிப்பில் 1952-ம் ஆண்டில் வெளிவந்த 'பராசக்தி' படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து நேஷனல் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "பராசக்தி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அறிமுகமான, 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு.பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.

அந்தத் திரைப்படத்தில் சிவாஜி அவர்களைக் கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தார். பெருமாள் முதலியார் அவர்கள் பிடிவாதமாக சிவாஜி அவர்களையே கதாநாயகனாக நடிக்கவைத்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்கள், தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியார் அவர்களிடம் ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான் "பராசக்தி".

பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தின் கலைஞர் அவர்களின் கனல் தெறிக்கும் வசனங்களும், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.

இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 'பராசக்தி' தலைப்பு பிரச்சினையானது பேசுபொருளாக மாறியுள்ளது.


Next Story