'மாடன் கொடை விழா' திரைப்பட விமர்சனம்


மாடன் கொடை விழா திரைப்பட விமர்சனம்
x

'மாடன் கொடை விழா' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

இயக்குனர் இரா, தங்கபாண்டி இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'மாடன் கொடை விழா'. இந்த படம் கோவில் நிலத்தை மீட்டு கொடை விழா நடத்த போராடும் நாயகனின் கதை. இந்த படத்தில் அறிமுக நடிகர் கோகுல் கவுதம் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷர்மிஷா நடித்துள்ளார். இப்படத்திற்கு விபின்.ஆர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இரா.தங்கபாண்டி இயக்கிய 'மாடன் கொடை விழா' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னையில் வேலை பார்க்கும் கோகுல் கவுதம் குடும்பத்தினர் கிராமத்தில் சுடலை மாட சாமியை குல தெய்வமாக வழிபடுகின்றனர். கோவில் இருந்த நிலத்தை கோகுல் கவுதமின் தந்தை உள்ளூர் தாதா சூர்ய நாராயணனிடம் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார். அந்த நிலத்தை சூர்ய நாராயணன் போலி பத்திரம் மூலம் தனக்கு சொந்தமாக்கி கொள்வதால் பல வருடங்களாக கோவிலில் கொடை விழாவை நடத்த முடியாமல் குடும்பத்தினர் தவிக்கிறார்கள்.

அந்த நிலத்தை சட்ட ரீதியாக மீட்டு திருவிழாவை நடத்த கோகுல் கவுதம் முயற்சித்து தாதாவுடன் பகையாகிறார். அவரை தீர்த்துக்கட்ட வெளியூர் ரவுடிகள் வருகிறார்கள். அவர்களிடம் இருந்து கோகுல் கவுதம் தப்பினாரா? கொடை விழாவை நடத்த முடிந்ததா? என்பது மீதி கதை.

கோகுல் கவுதம் யதார்த்த இளைஞனாக மனதில் நிற்கிறார். காதல் உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவதில் தேர்ந்த நடிப்பு. சாமியாட்டத்தில் ஆக்ரோஷம் காட்டுகிறார். நாயகி ஷர்மிஷா துறுதுறு பார்வை வெடுக்கான பேச்சு துடுக்குத்தன நடிப்பு என்று மனதை அள்ளுகிறார். சூர்யநாராயணன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

ஸ்ரீப்ரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா, சுப்பிரமணி ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர். சின்ராஜ் ராம் கேமரா ஆரிதாரம் பூசாத மனிதர்களின் வாழ்வியலை அம்சமாக படம் பிடித்துள்ளது. விபின்.ஆர்பின்னணி இசை கதையோடு ஒன்ற வைத்து இருக்கிறது. குல தெய்வ கொடை விழா பின்னணியில் நடக்கும் காதல், மோதல், குடும்ப உறவுகளை நேர்த்தியான திரைக்கதையில் சுவாரஸ்யமும் விறுவிறுப்புமாக நகர்த்தி தரமான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் இரா. தங்கபாண்டி.


Next Story