'அண்ணாத்த' படத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்த குஷ்பு
நடிகை குஷ்பு 'அண்ணாத்த' படத்தில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'அண்ணாத்த'. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் சுமார் ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை குஷ்பு அண்ணாத்த படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது, படத்தில் தனது கதாபாத்திரம் ஆரம்பத்தில் கூறப்பட்டது போல் இல்லை என்றும், டப்பிங் போது படத்தை பார்த்து விட்டு தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். படத்தில் நானும், நடிகை மீனாவும் கதாநாயகிகளாக இருப்போம் என்று முதலில் தெரிவித்தனர்.
ஆனால் ரஜினி சாருக்கு திடீரென ஒரு ஹீரோயின் கிடைத்தார், அதனால் தனது கதாபாத்திரம் நகைச்சுவையாக மாறியதை நான் உணர்ந்தேன். நான் ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரமாக மாறினேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.