'நடிகையர் திலகம்' படத்தில் முதலில் நடிக்க மறுத்ததாக கூறும் கீர்த்தி சுரேஷ் - ஏன் தெரியுமா?
நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றிருந்தார் கீர்த்தி சுரேஷ்.
சென்னை,
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றிருந்தார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க முதலில் மறுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"நாக் அஸ்வின் எனக்கு கதை சொல்லும்போது, நான் நடிக்க மறுத்துவிட்டேன். தயாரிப்பாளர்கள் ஸ்வப்னாவும் பிரியங்காவும் நான் நடிப்பேன் என்று உற்சாகமாக இருந்தனர். ஆனால், நான் பயந்து, படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ஸ்வப்னாவும் பிரியங்காவும் அதிர்ச்சியடைந்து, 'என்ன இந்த பொண்ணு? சாவித்ரி அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துவிட்டார்?' என்றனர். ஆனால் அந்த பாத்திரத்தை என்னால் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா? இல்லையா? என்ற பயத்தில் அதை நிராகரித்தேன்' என்றார்.