சர்ச்சையில் சிக்கிய 'டாக்சிக்': படத்திற்காக 100 மரங்களை வெட்டியதாக குற்றச்சாட்டு
டாக்சிக் படத்திற்காக 100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கர்நாடக சுற்றுச்சூழல் மந்திரி ஈஷ்வர் காந்த்ரே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது படமான டாக்சிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக 100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கர்நாடக சுற்றுச்சூழல் மந்திரி ஈஷ்வர் காந்த்ரே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
"டாக்சிக்" படத்தின் செட் அமைக்க பெங்களூருவில் 100 மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாகவும் மரங்களை வெட்டியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே கடிதம் எழுதியுள்ளார்.