ஜெயம் ரவி நடிக்கும் 'ஜெ.ஆர் 34' படத்தின் படப்பிடிப்பு பூஜை
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 34-வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இவர் தற்பொழுது ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவியின் 34-வது (ஜெ.ஆர் 34) படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நடிகர்கள் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார்.
இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபல இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்ற உள்ளார் என்றும் அப்டேட் வெளிவந்துள்ளது. இப்படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 34-வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் திங்கள்கிழமை துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் ஜெயம் ரவியுடன் இணையும் 3-வது படம் 'ஜெ.ஆர் 34' என்பது குறிப்பிடத்தக்கது.