'என் தந்தை ஒரு நடிகராக இருந்திருந்தால்...'- சினிமா வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்த டொவினோ தாமஸ்


If my father had been an actor...- Tovino Thomas shares his screen life experience
x
தினத்தந்தி 3 Sep 2024 5:14 AM GMT (Updated: 3 Sep 2024 5:57 AM GMT)

டொவினோ தாமஸ் தனது திரை வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தார்.

திருவனந்தபுரம்,

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றன. அடுத்து ஐடன்டிடி, அவரன், ஏ.ஆர்.எம் போன்ற படங்களில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இந்நிலையில், ஏ.ஆர். எம். படத்தின் புரொமோசனின்போது பேசிய டொவினோ தாமஸ் தனது திரை வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,

'திரைப்படங்களில் பரம்பரை பரம்பரையாக நடித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கும்போது, உங்களுக்கு முதல் வாய்ப்பு என்பது எளிதாகக் கிடைக்கலாம். ஆனால், இரண்டாவது, மூன்றாவது மற்றும் அடுத்தடுத்து படங்களை பெறுவது என்பது உங்களின் திறமையை பொறுத்தது. இதுவே, எந்த திரை பின்புலமும் இல்லாத ஒருவர், தனது முதல் படத்தைப் பெறுவது மிகவும் கடினம்.

ஒரு நடிகரின் மகன் நடிகராக மாறினால், அவர் தனது தந்தையைப்போல இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரது தந்தை அந்த நிலைக்கு வர பல ஆண்டுகள் எடுத்தாலும், தந்தையின் நடிப்பை வைத்தே மகனையும் மதிப்பிடுகின்றனர். அப்போது மகனுக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். என் தந்தை ஒரு வழக்கறிஞர், இதனால், நான் ஒரு பிளாப் படத்தை கொடுத்தாலும் அது அவரை பாதிக்காது. ஆனால் என் தந்தை ஒரு நடிகராக இருந்திருந்தால், அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கும், என்றார்.


Next Story