கமலுக்கு எச்சரிக்கை விடுத்த கர்நாடகா திரைப்பட சம்மேளனம்


கமலுக்கு எச்சரிக்கை விடுத்த கர்நாடகா திரைப்பட சம்மேளனம்
x
தினத்தந்தி 29 May 2025 6:04 PM IST (Updated: 29 May 2025 6:12 PM IST)
t-max-icont-min-icon

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

பெங்களூரு,

'தக் லைப்' திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது திரைப்படத்தை புரோமோஷன் செய்யும் பணிகளில் கமல்ஹாசன் உள்பட திரைப்பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது, சிறப்பு விருந்தினராக சிவராஜ் குமார் பங்கேற்றார். அதில் கமல்ஹாசன் பேசுகையில், "ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்றார். நடிகர் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் கன்னட அமைப்பினர் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். முதல்வர் சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்" என்று கன்னட வளர்ச்சித்துறை மந்திரி கூறியுள்ளார்.

இந்நிலையில், நாளைக்குள் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் "தக் லைப்" வெளியாகாது என்று கர்நாடகா திரைப்பட சம்மேளனத் தலைவர் நரசிம்மலு அறிவித்துள்ளார். "பல கன்னட அமைப்புகள் கமலின் 'தக் லைப்' படத்தை தடை செய்யக் கோரியுள்ளன. நாங்கள் இது குறித்து விவாதித்தோம். நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளோம். அவர் செய்தது தவறு. இன்று அல்லது நாளைக்குள் அவர் பொது மன்னிப்பு கேட்கவில்லை என்றால், எந்த சூழ்நிலையிலும் அவரது படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என்று நரசிம்மலு கூறியுள்ளார்.

முன்னாள் கர்நாடகா திரைப்பட சம்மேளனத் தலைவராக இருந்த நடிகை ஜெயமாலா, "மொழி சர்ச்சை ஏற்படும் போதெல்லாம், அனைத்து கன்னடர்களும் ஒன்றுபட வேண்டும். அது எங்கள் கடமை. கமல் தெரிந்தோ தெரியாமலோ பேசியிருந்தாலும், அவரது கூறுவது தவறு. கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது அல்ல" என்று கூறியுள்ளார்.

தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது எனும் கருத்தில் மன்னிப்புக்கு இடம் இல்லை என கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். "அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. இது பதில் அல்ல, விளக்கம். வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியர் நிபுணர்களிடம் இதனை விட்டுவிடுவோம் . நான் கூறியதற்கு இன்னொரு கோணமும் இருக்கலாம். அதை வல்லுநர்களே கூற வேண்டும். என்னை போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டிய விஷயம் இல்லை இது. இதற்கு வல்லுனர்கள் பதில் கூறுவார்கள்" என கமல் தெளிவுபடுத்தியுள்ளார்.

1 More update

Next Story