'அன்பை இரட்டிப்பாக திருப்பி தர இன்னும் அதிகமாக உழைப்பேன்' - சிவகார்த்திகேயன்

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'மதராஸி' மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் 'பராசக்தி' படத்திலிருந்து வாழ்த்துகளும் அப்டேட்களும் வெளியாகின.
இதுமட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள், சமூக ஊடகங்கள், நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
"மதராஸி" படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்ட குழுவிற்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி. தற்போது படப்பிடிப்பில் உள்ள 'பராசக்தி' படகுழுவின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி.
எனது அன்பு ரசிகர்களான சகோதர சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துகளையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்' என்று தெரிவித்திருக்கிறார்.