ரூ. 1000 கோடி வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தை இயக்க மாட்டேன் - மணிரத்னம்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் யூடியூபில் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.'தக் லைப்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மணிரத்னத்தின் மௌன ராகம் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை அனைத்து படங்களும் தனித்துவம் மிக்கதாக அமைந்திருக்கும். 'தக் லைப்' திரைப்படத்திற்காக படக்குழுவினர் அடுத்தடுத்து நேர்காணல்களில் பேசி வருகின்றனர். படத்தின் இயக்குநர் மணிரத்னம் சில நேர்காணல்களில் பங்குபெற்று 'தக் லைப்' திரைப்படத்தையும் தாண்டி பல விஷயங்களைப் பேசி வருகிறார்.
நேர்காணலில் கலந்துகொண்ட மணிரத்னத்திடம் ஏன் தமிழ் சினிமாவிலிருந்து இன்னும் ரூ. 1000 கோடியை வசூலிக்கும் திரைப்படம் உருவாகவில்லை எனக் கேட்கப்பட்டது. அதற்கு மணிரத்னம், "நாம் எதற்காக சினிமாவுக்கு வந்தோம்? நல்ல படங்களை எடுக்க வந்தோமோ இல்லை இருப்பதிலேயே அதிக வசூலைக் குவிக்கும் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவா? முன்பெல்லாம் ஒரு படம் நன்றாக இருக்கிறது; ஒருகடத்திற்கு மேல் நன்றாக இல்லையென்றே பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது ரூ. 100 கோடி, ரூ. 500 கோடி என வசூலைப் பற்றி யோசிக்கின்றனர். எனக்குத் தெரிந்த பல இயக்குநர்கள் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டுமென நினைக்கின்றனர். அப்படங்கள் அதிகமாக வசூலித்தால் சந்தோஷம். சிலர் வசூலைக் குவிப்பது ஒன்றே நோக்கமாக வைத்திருந்தால் அதுவும் சரிதான். ஆனால், நான் ரூ. 1000 கோடி வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தை இயக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற உள்ளது.






