'நமது ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்' - கமல்ஹாசன்


I salute our brave Armed Forces - Kamalhasan
x

இந்திய ராணுவ வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

இதனைத்தொடர்ந்து எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்தது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.

ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அன்றைய தினமே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு இரு நாட்டு எல்லை பகுதிகளில் அமைதியான சூழல் நிலவியதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'ஆபத்திற்கு எதிராக உறுதியுடன் போராடிய நமது ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட எல்லையோர மாநில மக்களின் தைரியம் பாராட்டத்தக்கது. பயங்கரவாதத்திற்கு முன்பு இந்தியா எப்போது வளைந்து கொடுக்காது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடுவது மட்டுமின்றி, இந்தியாவை மேலும் வலுவாக கட்டமைப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story