அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை - விக்னேஷ் சிவன்
அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி,
2012-ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெளியான 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். 2022-ம் ஆண்டு நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஓட்டலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விலைக்கு பேசியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக செய்திகள் இணையத்தில் வைரலானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் ஒரு முட்டாள்தனமான செய்தியை தெளிவுபடுத்துவதற்காக இந்த பதிவை பதிவிடுகிறேன்.
என்னுடைய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பிற்காக பாண்டிச்சேரியில் உள்ள விமான நிலையத்தை பார்க்க போயிருந்தேன். அதற்கு அனுமதி பெற மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோர்களை சந்திக்க வேண்டியிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த உள்ளூர் மேலாளர் எனது சந்திப்பிற்குப் பிறகு அவரிடம் ஏதோ ஒன்றைப் பற்றி விசாரித்தார். அது தவறுதலாக என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல் மீம்ஸ் உருவாக்கியது மிகவும் வேடிக்கையானவை; ஆனால் தேவையற்றவை" என பதிவிட்டுள்ளார்.