'ஸ்மைல் மேன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்


ஸ்மைல் மேன் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
x

நடிகர் சரத்குமார் நடித்துள்ள 'ஸ்மைல் மேன்' இன்வெஸ்டிகேசன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். கடந்த 27-ந் தேதி இவரது நடிப்பில் 'தி ஸ்மைல் மேன்' படம் வெளியானது. இப்படம் இவரது 150-வது படமாகும். கிரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 'ஸ்மைல் மேன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சைக்கோ கொலையாளி வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சரத்குமார் ஒரு விபத்தில் சிக்கி பல வருடங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். இந்த விபத்தினால் மறதி நோய்க்கும் உள்ளாகிறார். அவரது நினைவுகள் முழுமையாக விரைவில் மறந்து போய் விடும் என்று மருத்துவர் தெரிவிக்கிறார்.

அப்போது தொடர் கொலைகள் நடக்கிறது. அதை விசாரிக்கும் போலீஸ் குழுவினர் சரத்குமாரின் ஆலோசனையை வேண்டி நிர்ப்பந்தம் செய்து மீண்டும் அவரை பணியில் சேர வைக்கின்றனர். கொலையாளியை பிடிக்க சரத்குமார் வியூகம் அமைக்கிறார். அவருடன் நெருக்கமாக பழகுபவர்கள் கொல்லப்படுகிறார்கள். கொலையாளி யார்? கொலைக்கான பின்னணி என்ன? கொலைகாரனை சரத்குமாரால் பிடிக்க முடிந்ததா? என்பது மீதி கதை..

சரத்குமார் வழக்கம்போல் போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதம். அலட்டல் இல்லாத அவருடைய அழுத்தமான நடிப்பு கதாபாத்திரத்திற்கு மேலும் வலிமை சேர்க்கிறது. மறதி நோய் பாதிப்பால் அவர் அனுபவிக்கும் வேதனையையும் வலியையும் பார்வையாளர்களுக்கு கடத்தும் அளவுக்கு மிகத் துல்லியமான நடிப்பை வழங்கி அனுபவ நடிப்புக்கு பெருமை சேர்க்கிறார்

நல்லவர் போல் வந்து வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார் சுரேஷ் மேனன். சிஜா ரோஸ் வசீகர தோற்றத்தால் கவனிக்க வைக்கிறார். ஸ்ரீகுமார் இளம் போலீஸ் அதிகாரியாக தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். இனியா, ஜார்ஜ் மரியான், கலையரசன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உட்பட அனைவரும் அளவாக நடித்து அவரவர் கதாபாத்திரங்களை மெருகேற்றி உள்ளார்கள்.

கொலைகாரனிடம் சிக்கித் தவிக்கும் பேபி ஆலியா அந்த தவிப்பை பார்வையாளர்களுக்கு நேர்த்தியாக கடத்துகிறார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி வேகம். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு, கவாஸ்கர் அவினாஷ் இசை திரில்லர் கதைக்கு பலம் சேர்த்துள்ளது. கொலைகளை துப்பறியும் திரில்லர் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஷ்யாம்-பிரவீன்.


Next Story