'ஜாலியோ ஜிம்கானா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
பிரபுதேவா மற்றும் மடோனா செபஸ்டின் நடித்துள்ள 'ஜாலியோ ஜிம்கானா' படம் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'ஜாலியோ ஜிம்கானா' என்ற படம் கடந்த 22-ந் தேதி வெளியானது. இப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், 'ஜாலியோ ஜிம்கானா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
வக்கீலாக நடித்துள்ள பிரபுதேவா அமைச்சரால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நியாயம் வாங்கி தர போராடுகிறார். கேட்டரிங் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் மடோனா செபஸ்டின் குடும்பத்துக்கும் அதே அமைச்சர் உணவுக்கான பணத்தை தராமல் ஏமாற்றுகிறார். இதனால் பிரபுதேவாவிடம் சட்ட உதவி கேட்டு செல்கிறது மடோனாவின் குடும்பம். அங்கு பிரபு தேவா சடலமாக இருப்பதை பார்த்து மிரள்கிறார்கள்.
அத்துடன் பிரபுதேவா வங்கி கணக்கில் 10 கோடி பணம் இருப்பதை அறிந்து அந்த பணத்தை கொள்ளையடிக்கவும் திட்டம் போடுகிறார்கள். பிரபு தேவாவின் கொலைக்கான காரணம் என்ன? மடோனா செபஸ்டின் குடும்பத்தால் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க முடிந்ததா? என்பது மீதி கதை.
பிரபுதேவாவுக்கு படம் முழுவதும் சடலமாக தோன்றக்கூடிய கதாபாத்திரம். அந்த வேடத்துக்கு இமைக்காமல், அசையாமல் உயிர் கொடுத்து நடித்திருப்பது சிறப்பு. சடலமாக விழுவது எழுவது அடி கொடுப்பது என படத்தை தாங்கி பிடித்துள்ளார். மடோனா செபஸ்டினுக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். அதில் அவரும் சிறப்பாக நடித்துள்ளார். யோகி பாபு வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். நக்கல் நையாண்டி என தன்னை வித்தியாசமானவராக காண்பித்துள்ளார் அபிராமி.
மலையாளம் பேசும் வங்கி அதிகாரியாக வரும் ஷக்தி சிதம்பரம் கலகலப்பு. ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நாஞ்சில் சம்பத், ஜெகன் கவிராஜ், சாம்ஸ், பூஜிதா, யாஷிகா ஆனந்த், மதுசூதனன் ராவ், ரோபோ சங்கர், சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவரும் கொஞ்ச நேரம் வந்தாலும் கதையை நகர்த்த உதவி செய்துள்ளனர்.
திணிக்கப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள், லாஜிக் மீறல்கள் பலவீனமாக உள்ளன. கணேஷ் சந்திராவின் கேமரா கொடைக்கானல், தென்காசியில் காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது. இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி கதைக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. லாஜிக் பார்க்காமல் நகைச்சுவையை மட்டும் பாருங்கள் என்று ஆரம்பத்திலேயே சொல்லி காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.