ஜிவி பிரகாஷின் "கிங்ஸ்டன்" சினிமா விமர்சனம்

திகில் கலந்த பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
இது 1982-ல் நடக்கும் கதை. தூத்துக்குடியில் உள்ள கூவத்தூர் கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அத்தனை பேரும் சடலமாக திரும்புகிறார்கள். கடலில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்கள் தான், மீனவர்களை கொன்று வருவதாக மக்கள் அச்சம் கொள்கிறார்கள். இதையடுத்து தொடர் மரணங்களை தடுக்க கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என அரசு தடை உத்தரவு பிறப்பிக்கிறது.
பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், சொந்தமாக படகு வாங்கி கடலில் செல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். இதற்கிடையில் தனது முதலாளி கடத்தல்காரர் என்று தெரிய வர அவரிடமிருந்து விலகுகிறார்.
ஒரு கட்டத்தில் கடலுக்குள் ஆன்மாக்கள் சுற்றுவது கட்டுக்கதை என்பதை உணர்த்துவதற்காக தனது நண்பர்களுடன் துணிந்து கடலுக்குள் செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். கடலுக்குள் நீடிக்கும் மர்மம் என்ன? மீனவர்களின் தொடர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? கடலுக்குள் சென்ற ஜி.வி.பிரகாஷ் மீண்டும் கரை திரும்பினாரா? என்பதே பரபரப்பான மீதி கதை.
இதுவரை ஜாலியான கதாபாத்திரத்தில் கலக்கி வந்த ஜி.வி.பிரகாஷ், இதில் சீரியசான கதாபாத்திரத்தில் அமர்க்கள படுத்தியிருக்கிறார். பல்வேறு பரிமாணங்களை காட்டும் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. திவ்யபாரதி கலக்கல் இல்லாத நடிப்பால் கவர்கிறார். பாடல் காட்சிகளில் நெளிவான நடனத்தால் கவர்கிறார். இன்னும் அவரை பயன்படுத்தி இருக்கலாம்.
அழகம் பெருமாள், சேத்தன், குமரவேல், சாபுமோன், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன் பிரவீன், கார்த்திக் என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பு சேர்க்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவில் கடலின் பிரமாண்டமும், அதன் பின்னணியில் நடக்கும் பயங்கரமும் மிரட்டுகிறது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல். 'ராசா... ராசா...' பாடல் மீண்டும் கேட்கும் ரகம்.
திவ்யபாரதி காணாமல் போக வேகம் எடுக்கும் கதையில், அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பு சம்பவங்களும், கடலுக்குள் அரங்கேறும் எதிர்பாராத திருப்பங்களும் படத்துக்கு பலம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். இரண்டாம் பாதியில் வேகம் குறைவு.
வழக்கமான பேய் படங்களுக்கு மத்தியில், கடல் என்ற பிரம்மாண்டமான பரப்பில் அமானுஷ்யம் கலந்த பேண்டஸி - திரில்லர் படைப்பாக, பரபரப்பான கதை களத்தில் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கமல் பிரகாசை பாராட்டலாம்.