'பிளாக்மெயில்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்


பிளாக்மெயில் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்
x

‘பிளாக்மெயில்’ படத்தின் அனைத்து பணிகளும் விரைவில் நிறைவடையும் என்று இயக்குநர் மு.மாறன் கூறியுள்ளார்.

சென்னை,

இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பிளாக் மெயில் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. இமான் இசையமைக்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான 'பிளாக்' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கோகுல் பெனாய் படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு பகிர்ந்துள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படம் குறித்து இயக்குநர் மு.மாறன் கூறும்போது, "எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கிரைம்- டிராமா கதைதான் 'பிளாக்மெயில்'. திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜி.வி.பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அவர் தனது டப்பிங் தொடங்கி இருக்கிறார். விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்" என்றார்.


Next Story