பாலிவுட்டில் அறிமுகமாகும் 'பகத் பாசில்': உறுதிப்படுத்திய இயக்குனர்
பகத் பாசில் கேரள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
மும்பை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கேரள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பில் அசத்தியுள்ளார்.
இதில் நகைச்சுவை கதாபாத்திரத்திருந்த பகத் பாசில், அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக 'புஷ்பா 2' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வரை ரூ.1,600 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இவ்வாறு கதாநாயகன், கமெடியன், வில்லன் என பலவகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகளை ஈர்த்துவரும் பகத்பாசில் இதுவரை பாலிவுட் படங்களில் நடிக்காதநிலையில், திரிப்தி டிம்ரிக்கு ஜோடியாக இம்தியாஸ் அலி இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது அதனை இயக்குனர் இம்தியாஸ் அலி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில்,
'ரொம்ப நாட்களாகவே 'தி இடியட் ஆப் இஸ்தான்புல்' படத்தை இயக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். இப்படத்தை 'பகத் பாசிலை வைத்து இயக்க வேண்டும் என்பதே எனது திட்டம். ஆனால், அது என்னுடைய அடுத்த படமா என்றால் அது எனக்கு தெரியாது' என்றார். இதனையடுத்து, ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.