சீனாவில் 'மகாராஜா' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜய்சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படம் நேற்று சீனாவில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னை,
'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் நேற்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தைப் பெற்ற அலிபாபா குழுமம் சுமார் 40,000 திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் டிக்கெட் முன்பதிவு, முதல் நாள் வசூல் சேர்த்து ரூ. 10 கோடி வரை மகாராஜா படம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கண்டிப்பாக வார இறுதியில் இப்படம் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.