'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்


லப்பர் பந்து படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
x

‘லப்பர் பந்து’ படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் லப்பர் பந்து படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "லப்பர் பந்து திரைப்படம் அழகான நடிப்பு திறனால் உருவாக்கப்பட்ட, மகிழ்ச்சி அடைய செய்த சிறப்பான திரைப்படம். கெத்து மற்றும் மைதானத்தில் அவருக்கு உருவாக்கப்பட்ட பில்டு-அப்களை ரசித்தேன். அறிமுக படத்தை சிறப்பாக வழங்கிய தமிழரசன் பச்சமுத்துவுக்கு வாழ்த்துக்கள். படத்தில் நடித்த தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார் புருஷோத்தமன், பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story