'சிங்கம்' இல்லை...காஜல் அகர்வால் பாலிவுட்டில் நடித்த முதல் படம் எது தெரியுமா?
கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'சிங்கம்' படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பார்வையாளர்களிடமிருந்து அதிக அன்பை பெற்றவர் காஜல் அகர்வால்.
மும்பை,
2007-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான 'லட்சுமி கல்யாணம்' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான காஜல் அகர்வால் 'சந்தாமாமா' படத்தின் மூலம் பிரபலமானார். 2009-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா' படம் காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தமிழில், இவர் 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த 'பழனி' படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்த இவர், பாலிவுட்டில், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'சிங்கம்' படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பார்வையாளர்களிடமிருந்தும் அதிக அன்பை பெற்றார்.
இது தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்காகும். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பலருக்கு இவர் தெரிய வந்தாலும், இதற்கு முன்பே காஜல் அகர்வால் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராயுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் என்பது பலருக்கு தெரியாது.
ஆம். காஜல் அகர்வால் ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் மற்றும் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான 'கியூன்! ஹோ கயா..' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இதில் அவர் வெளியில் தெரியவில்லை. பின்னர் நடித்த சிங்கம் தான் அவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது