சர்வதேச விருது வென்ற 'கேப்டன் மில்லர்' திரைப்படம்


சர்வதேச விருது வென்ற கேப்டன் மில்லர் திரைப்படம்
x
தினத்தந்தி 4 July 2024 10:04 AM GMT (Updated: 4 July 2024 10:47 AM GMT)

நடிகர் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பிரிட்டன் தேசிய விருதை வென்றுள்ளது.

சென்னை,

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 -ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் பங்கு பெற்று வந்தது. அந்த வகையில், லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன் தேசிய விருது விழாவில் 2024 -ம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழித் திரைப்படம் பிரிவில் இந்தியாவிலிருந்து 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற இந்த தேசிய விருது விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படமாகக் 'கேப்டன் மில்லர்' தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. படக்குழுவின் சார்பாக, இவ்விருதை சத்யஜோதி நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் பெற்றார். சர்வதேச அளவில் முக்கியமான விருதை வென்ற 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இச்செய்தியை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.


Next Story