அவதூறு வழக்கு : நடிகர் வடிவேலு மாஸ்டர் கோர்ட்டில் ஆஜர்


அவதூறு வழக்கு : நடிகர் வடிவேலு மாஸ்டர் கோர்ட்டில் ஆஜர்
x

நடிகர் சிங்கமுத்துவிற்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் கோர்ட்டில் நடிகர் வடிவேலு ஆஜரானார்.

சென்னை,

நடிகர் சிங்கமுத்து யூ-டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில். "பல்வேறு யூ-டியூப்சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார். எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று சிங்கமுத்து தெரிவித்திருந்தார்.

சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணை மாஸ்டர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் கோர்ட்டில் நடிகர் வடிவேலு ஆஜரானார். சாட்சியம் முடிந்த பின்னர் ஆஜரான சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக முறையிட்டார். மேலும், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி வழக்கை மாஸ்டர் கோர்ட்டிலிருந்து ஐகோர்ட்டிற்கு அனுப்பிவைப்பதாகவும் குறுக்கு விசாரணை தொடர்பாக அங்கே முறையிட்டு கொள்ளலாம் என கூறியுள்ளார்.


Next Story