'கங்குவா'வை தொடர்ந்து பாபி தியோல் வில்லனாக நடித்த 'என்.பி.கே 109' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, தற்போது தனது 109-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்காலிகமாக 'என்.பி.கே 109' என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்குகிறார்.
எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியான கங்குவாவை தொடர்ந்து இதில் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். மேலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தில் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. அதன்படி, இப்படத்திற்கு 'டாக்கு மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.