'விடுதலை 2' திரைப்படத்தை பாராட்டிய பிரபலங்கள்
‘விடுதலை 2’ படத்திற்கு இயக்குனர் ராஜு முருகன், சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 'விடுதலை 2' திரைப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., பி.சி.ஸ்ரீராம்,மாரி செல்வராஜ், தனுஷ் உள்ளிட்ட பலர் பாராட்டி இருந்தனர். அந்த வகையில் இயக்குநர் ராஜு முருகன், அவரது எக்ஸ் பதிவில், "விடுதலை 2 அபூர்வமான, அற்புதமான படைப்பு. நமது வரலாறை அறிந்து கொள்ளாமல், நமது இலக்கை அடைய முடியாது என்ற பாடத்தை இந்த தலைமுறைக்கு கையளிக்கிறது இந்த படம். மக்கள் அரசியல் களத்தில் எண்ணற்ற இடதுசாரி தோழர்கள் செய்த தியாகம், சிந்திய ரத்தத்தின் சில துளிகளை நமது நெஞ்சில் அழியாமல் படர விடுகிறது. மிக மிக மலினமான இன்றைய அரசியல் சூழலில் நம் ஒவ்வொருவருக்கும் தேவையான உணர்வு... விடுதலை!
இதை நிகழ்த்தி காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாத்தியாராகவே வாழ்ந்து காட்டியிருக்கும் விஜயசேதுபதிக்கும், சூரி, எல்ரெட் குமார், வேல்ராஜ், உள்ளிட்ட படக்குழுவினருக்கும் எங்கள் இளையராஜா சாருக்கும் எப்போதைக்குமான அன்பு..! ' என பாராட்டியுள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி எக்ஸ் பதிவில், ' 'விடுதலை 2' திரைப்படம் பார்த்தேன். "மோதானி" யின் காலத்தில் வாத்தியாரின் அரசியலை பேசுவது எளிய காரியமல்ல. பேசாப் பொருளை பேசுவதும் பேச வேண்டியதைப் பேசுவதும் கலையின் பணி. "விடுதலை-2" செய்துள்ளதும் அதுவே. வாழ்த்துகள் வெற்றி. ' என பாராட்டியுள்ளார்.