சினிமாவில் காட்டிய ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள் - விஜய்க்கு ஜெயம் ரவி வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே மாநாட்டுத் திடலில் குவிந்து வருகின்றனர்.
கட்சியின் நோக்கம், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் மாநாட்டில் விஜய் உரையாற்ற இருக்கிறார். விஜய் என்ன பேசப் போகிறார் என தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். முதல் மாநாட்டை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்க்கு நடிகர் ஜெயம் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தளபதி விஜய் அண்ணாவின் இந்த அபாரமான மைல்கல்லுக்கு வாழ்த்துகள். சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பான வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.