'பேட்மேன் 2' படத்தின் ரிலீஸ் 2027-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு


பேட்மேன் 2 படத்தின் ரிலீஸ் 2027-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 29 Dec 2024 10:14 PM IST (Updated: 29 Dec 2024 10:17 PM IST)
t-max-icont-min-icon

பேட்மேன் 2 படத்தின் ரிலீஸ் 2027-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களில் உலகப் புகழ் பெற்ற கதாபாத்திரம் 'பேட்மேன்'. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஏராளமான கார்ட்டூன்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்கள் வெளியாகியுள்ளன. மேலும் புதிய கதைக்களங்களுடன் பல்வேறு 'பேட்மேன்' திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அவற்றில் ஆஸ்கார் விருது வென்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளியான 3 பேட்மேன் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. அதில் பேட்மேன் கதாபாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்திருந்தார். மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜர் 'ஜோக்கர்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். அந்த 3 படங்களிலும் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் அமைத்திருந்த பின்னணி இசைக்கு இன்றுவரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதன் பிறகு இயக்குநர் ஜேக் ஸ்னைடர் இயக்கத்தில் உருவான 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' படத்தில் நடிகர் பென் அப்லேக், 'பேட்மேன்' கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஜஸ்டிஸ் லீக், பிளாக் ஆடம் உள்ளிட்ட படங்களில் பென் அப்லேக் பேட்மேனாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் உருவான மற்றொரு 'பேட்மேன்' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. அதில் 'ட்வைலைட்' படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக அவதாரமெடுத்தார். இவரது நடிப்பு இதற்கு முன்பு பேட்மானாக நடித்தவர்களிடம் இருந்து சற்று மாறுபட்டு இருந்தது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தின் 2-ம் பாகம் 2026-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 'பேட்மேன் 2' திரைப்படம் 2027-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story