'அஜித்குமார் ரேஸிங்' அணி பெயரில் போலி இணையதளம் - அஜித் தரப்பு விளக்கம்


அஜித்குமார் ரேஸிங் அணி பெயரில் போலி இணையதளம் - அஜித் தரப்பு விளக்கம்
x
தினத்தந்தி 3 Nov 2024 9:25 AM (Updated: 3 Nov 2024 9:32 AM)
t-max-icont-min-icon

'அஜித்குமார் ரேஸிங்' இணையதளம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டதல்ல என அஜித்தின் மேலாளர் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த சூழலில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. அது என்னெவென்றால் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கியதுதான்.

'அஜித்குமார் ரேஸிங்' அணி ஐரோப்பாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தயத்தில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேஸிங்' அணியின் லோகோ வெளியானது. அதில், அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுனராக அஜித் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜித்துடன் மேலும் 3 கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாக உள்ளது.

துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. இதில் போர்சே 992 ஜிடி3 கார் பந்தயத்திற்காக சமீபத்தில் சோதனை ஓட்டம் மேற்கொண்டார் அஜித். அப்போது அவரது ஹெல்மட் மற்றும் காரில் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை லோகோ இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, துணை முதல்-அமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அஜித்தின் ரேசிங் குறித்து தொடர்ந்து அப்டேட் வரும் நிலையில் அவரது அணி சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் உலா வந்தன. இந்த நிலையில் அந்த இணையதளம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டதல்ல என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கம் வாயிலாக தற்போது தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அதிகாரபூர்வமாக இணையதளம் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை இந்த இணையதளத்தை தவிர்க்கவும் என அந்த அதிகாரபூர்வமற்ற இணையதள லிங்க்கையும் பகிர்ந்துள்ளார்.


Next Story