"சச்சின்" ரீ-ரிலீஸில் வைரலான நடிகை ரஷ்மி நெகிழ்ச்சி

விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படம் ரீ-ரிலீஸில் முதல் நாளில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2005-ம் ஆண்டு விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் கடந்த 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆனது. 'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரீ-ரிலீஸான நிலையில், இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். புதிய படத்தைப் போலவே டிரைலர் ரிலீஸ், சிங்கிள்ஸ் ரிலீஸ் என இப்படத்திற்கு கடந்த சில வாரங்களாகவே புரோமோஷன் செய்து வந்தார்கள்.இந்த ஆண்டு விஜய் நடிக்கும் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் விஜய் தற்போது நடித்து வரும் 'ஜனநாயகன்' படம் வெளியாகிறது. இதனால் இந்த சச்சின் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
சச்சின் திரைப்படம் முதல் நாளில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. 60 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்ததாக கலைப்புலி தாணு கூறியிருந்தார்.
இந்நிலையில், ரீ-ரிலீஸில் சச்சின் படத்தை பார்த்த பலரும் ஜெனிலியாவிற்கு தோழியாக வரும் பெண்ணை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ரீ-ரிலீஸில் அவரை ரசித்து பார்த்த பல ரசிகர்கள் அந்த பெண் யார் என இணையதளத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர். படத்தில் அவர் இடம்பெறும் காட்சிகளை எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு ஹார்ட்களை பறக்க விட்ட நிலையில், அவரை கண்டுபிடித்து அவரை பின்தொடர தொடங்கினர்.
திடீர் வைரலானதை அடுத்து அந்தப் பெண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது பெயர் ரஷ்மி என்று கூறிய அவர், இவ்வளவு வருடம் கழித்து சச்சின் படத்தை கொண்டாடியதுடன் தன்னையும் ரசிகர்கள் ரசித்து வைரலாக்கி வருவது பெருமையாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரியில் படிக்கும்போது தனக்கு சச்சின் படத்தில் வாய்ப்பு வந்ததாகவும், அதன்படி அந்த வாய்ப்பை ஏற்று சின்ன ரோலில் நடித்த தன்னை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சச்சின் படத்தில் நடித்தபோது ரஷ்மிக்கு 20 வயது. தற்போது அவர் திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார். தொழில்முனைவோராக இருப்பதாக ரஷ்மி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.






